
மெக்சிகோ சிட்டி, மார்ச்-22 – மெக்சிகோவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக, வன்முறையுடன் கூடிய காளைச் சண்டைக்கு அந்நாட்டரசு தடை விதித்துள்ளது.
மக்களின் பாரம்பரியமும் காக்கப்பட வேண்டுமென்பதால், இனி இரத்தம் சிந்தா காளைச் சண்டைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அதாவது காளைகள் கொல்லப்படவோ காயப்படுத்தப்படவோ கூடாது; வாள், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மாடுகள் துன்புறுத்தப்படவும் கூடாது.
அதே சமயம், வழக்கத்தில் உள்ளது போல் காளைச் சண்டை மணிக்கணக்கில் எல்லாம் இனி தொடரக் கூடாது; அதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதியச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மெக்சிகோ அரசின் இந்நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
காளைச் சண்டைக்கு முழுத் தடை விதிக்கக் கோரிய விலங்கு நல அமைப்புகளும் ஆர்வலர்களும் சற்று ஏமாற்றமடைந்தாலும், இது முழுத் தடையை நோக்கிய முதல் படி என பாராட்டியுள்ளனர்.
ஆனால், பாரம்பரியத்தில் ஊறிப் போன மெக்சிகோ மக்கள் குறிப்பாக கிராமவாசிகள் கொதித்துப் போயிருக்கின்றனர்.
அது தங்களின் அடிப்படை உரிமை என்றும், அரசாங்கம் கட்டுப்பாடு விதிக்க முடியாதென்றும் மக்கள் குமுறுகின்றனர்.
காளைச் சண்டை நடத்துநர்களுக்கும் ஏமாற்றமே.
அதற்குக் காரணம், இந்தக் காளைச் சண்டைகள் மெக்சிகோ முழுவதும் 80,000 நேரடி வேலை வாய்ப்புகளையும், 146,000 நேரடி அல்லாத வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனவாம்.
அத்தொழில்துறை மூலம் ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதே போன்றதொரு தடை 2023-ல் கொண்டு வரப்பட்ட போது பெரும் எதிர்ப்புகள் கிளம்பியதால், வேறு வழியின்றி மெக்சிகோ உச்ச நீதிமன்றம் அத்தடையை இரத்துச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
காளைச் சண்டை உலகில் ஆண்டுதோறும் 180,000 காளைகள் கொல்லப்படுவதாக மிருக வதையை எதிர்க்கும் அமைப்புகளின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.