
கோலாலம்பூர், ஜூலை 31 – ஆசிரியர் பயிற்சி கல்வி கூடங்களிலிருந்து பட்டம் பெற்ற பிறகு கிடைக்கின்ற முதல் வேலையை மறுக்கின்ற ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று கல்வி அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழப்பார்கள் என்றும் கருப்புப் பட்டியலில் அவர்களின் பெயர் உடனடியாக இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் பாடக் கோரிக்கைகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்ற நிலையில் அதை நிராகரிப்பது முறையற்ற செயலாகும்.
கல்வி சேவைகள் ஆணையத்தின் (SPP) ஒத்துழைப்புடன் 97 சதவீத புதிய ஆசிரியர்கள் ஏற்கனவே வெற்றிகரமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சபா, சரவாக் மற்றும் ஒராங் அஸ்லி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு சேவை ஒப்பந்த (COS) திட்டத்தின் கீழ், ஆசிரியர் பட்டதாரி அல்லாதவர்களுக்கு IPG இல் ஆசிரியர் பயிற்சி துறையில் ஓராண்டு முதுகலை டிப்ளமோ (DPG) படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகின்றதென்று பாட்லினா சிடெக் கூறியுள்ளார்.
DPG படிப்பை முடித்தவர்களுக்கும் பள்ளி அளவிலான காலியிடங்கள் மற்றும் பாடத் தேவைகளின் அடிப்படையிலேயே வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.