
ஷா அலாம், செப் 12 – சிலாங்கூர் மற்றும் மலேசிய காற்பந்து குழுவின் முன்னாள் ஆட்டக்காரரான பி.தர்மலிங்கம் பொன்னுசாமி காலமானார்.
மொக்தார் டஹாரி, சாந்தோக் சிங், சோ சின் ஆன், கோல்கீப்பர் ஆர்.ஆறுமுகம் ஆகியோருடன் தேசிய காற்பந்து குழுவிலும் சிலாங்கூர் குழுவிலும் விளையாடியுள்ள பி.தர்மலிங்கம் முதல் முறையாக 1981ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய கிண்ண காற்பந்துப் போட்டியில் மலேசிய குழுவில் விளையாடினார்.
1982ஆம் ஆண்டு மலேசியாவின் ஹரிமாவ் குழுதிவிலும் , 1985அம் ஆண்டு தென் கொரியாவுக்கு எதிரான உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான தேர்வு சுற்று ஆட்டத்திலும் அவர் களம் இறங்கினார்.
1986 ஆம் ஆண்டு merdeka கிண்ண காற்பந்து போட்டியில் சாம்பியனாக வாகைசூடிய மலேசிய காற்பந்து குழுவிலும் விளையாடியுள்ள தர்மலிங்கம் காலஞ்சென்ற கோல்கீப்பர் ஆறுமுகம் அவர்களின் தலைமையில் செயல்பட்ட பண்டமாரான் ஸ்டார்பிரைட் (Starbright) கிளப்பிலிருந்து அடையாளம் காணப்பட்ட ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1981ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டுரை தர்மலிங்கம் சிலாங்கூர் காற்பந்து குழுவிலும் விளையாடியுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் மூன்று முறை மலேசிய கிண்ண காற்பந்து போட்டியில் சிலாங்கூர் குழு வெற்றி பெறுவதற்கும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
64 வயதுடைய தர்மலிங்கம் இன்று நண்பகல் 12 மணியளவில் இறந்ததாக அவரது புதல்வரான 33 வயதுடைய ஆறுமுகம் தெரிவித்தார்.
அவரது நல்லுடல் நாளை சனிக்கிழமை No 11, Lorong Mesra 7, Taman Chi Liung, Pandamaran என்ற முகவரியிலுள்ள வீட்டில் மதியம் 12 மணியளவில் நடைபெறும் இறுதி சடங்கிற்குப் பின்னர் கிள்ளான், சிம்பாங் லீமா மையத்தில் தகனம் செய்யப்படும்.