
செப்பாங், ஜனவரி-29-இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மூவர், பிரபல குற்றச்செயல் கும்பலான “கேப்டன் பிரபா”வின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
38 வயது நவீந்திரன் ராஜ் குமரேசன், 30 வயது பிரதீப் குமார் செல்வராஜ், 30 வயது ஸ்ரீதரன் சுப்பிரமணியம் ஆகியோர், முன்னதாக பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்பட்டு, மும்பையில் கைதுச் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை KLIA கொண்டு வரப்பட்டு, நேரடியாக செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
2023 டிசம்பர் முதல் 2025 செப்டம்பர் வரை, குவாலா லாங்காட்டின் ஜெஞ்ஜாரோம் தோட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மூவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
‘கேப்டன் பிரபா’ என்ற பெயரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
அக்குற்றம் SOSMA சட்டத்தின் கீழ் வருவதால் வழக்கை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீண்டகால சிறைத்தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



