பெய்ஜிங், டிசம்பர்-12, சீனாவில், நேரலை நிகழ்வில் பெண்ணின் பிட்டத்தில் மூங்கில் குச்சியை விட்டு சீண்டியதன் பேரில், 46 மில்லியன் பின்தொடர்பாளர்களை (followers) வைத்துள்ள சமூக ஊடகப் பிரபலம் கைதாகியுள்ளார்.
சீன பெருநிலத்தில் ஆங்காங்கே நேரலை செய்யும் 28 வயது மெங்கின் ( Meng) நகைச்சுவைக்கு ஏராளமானோர் இரசிகர்களாக உள்ளனர்.
அவ்வகையில் நவம்பர் மாதக் கடைசியில் நடைபெற்ற அத்தகைய நேரலையின் போது, குட்டைப் பாவாடையுடன் சாலையில் டீ வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மெங் ஆபாசமாக நடந்துகொண்டார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண் பின்னால் திரும்பி ஏன் அப்படி செய்தாய் எனக் கேட்க, அதற்கு சிரித்துக் கொண்டே சற்று ஆபாசமாக மெங் பதிலளித்தார்.
இதை நேரலையில் பார்த்து அதிர்சியடைந்து இணையப் பயனர்கள் புகாரளித்ததால், மெங்கின் சமூக ஊடகப் பக்கம் 15 நாட்களுக்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், உண்மையில் மெங்கின் சமூக ஊடகங்களைப் பிரபலப்படுத்துவதற்காக வேலைக்கு எடுக்கப்பட்டவர் என விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஆக, நேரலைக்கு அதிக views-களைக் குவிக்க வேண்டுமென்பதற்கான இருவரின் யுக்தியே அந்த மூங்கில் குச்சி சம்பவம் என தெரிய வந்துள்ளது.
நகைச்சுவைக்காக என்றாலும், நேரலையில் சிறார்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை அச்சம்பவம் முகம் சுளிக்க வைத்துள்ளது.
எனவே 10 நாட்கள் காவலில் உள்ள மெங் மீது விசாரணைத் தொடருமென போலீஸ் கூறியது.