
அலோர் ஸ்டார், ஜூலை-18- 100 வயதை எட்டிவிட்ட நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராகும் எண்ணம் தமக்கில்லை என துன் Dr மகாதீர் மொஹமட் கூறியுள்ளார்.
ஒருவேளை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அடுத்து ஆட்சியைப் பிடித்தால், அதன் ஆலோசகராக இருக்கவே தாம் விரும்புவதாக அவர் சொன்னார்.
“இந்த 100 வயதில் முன்பு போல் என்னால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது; எனவே நாட்டை இளையத் தலைமுறை வழிநடத்தட்டும்” என்றார் அவர்.
24 ஆண்டுகள் பிரதமராகவும் 80 ஆண்டுகள் அரசியல் வாழ்விலும் தாம் இருந்திருப்பதை – இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
கெடா, அலோர் ஸ்டார், Suka Menanti அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற Himpunan Mandat Negarawan பேரணியில் பங்கேற்று பேசியபோது மகாதீர் அதனைத் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் தலைவரும் மற்றொரு முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின், பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, ஜூலை 26-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கான முன்னோட்டமாக நேற்றைய இந்தப் பேரணியை பெரிக்காத்தான் தலைவர்கள் வருணித்தனர்.