
கோலாலம்பூர், பிப் 21 – mpox வைரஸ் அல்லது குரங்கம்மை நோயை தடுப்பதற்கான MVA-BN தடுப்பூசியின் மொத்தம் 2,220 டோஸ்கள் நேற்று நாட்டிற்கு வந்தடைந்ததாக சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட ஆசியான் கோவிட் -19 நிதியத்தின் விளைவாக இந்த தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் குரம்கம்மை நோய்த்தொற்றின் அபாயத்தில் உள்ள 1,100 நபர்கள் மட்டுமின்றி , சுகாதார அமைச்சின் முன் களப் பணியாளர்களும் பயனடைவார்கள்.
இந்த தடுப்பூசி திட்டத்தின் முக்கிய நோக்கம் தொற்றுநோய் அபாயத்தில் உள்ள, குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதாகும் என்று சுல்கெப்லி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் வழங்குவது மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே இருப்பதோடு பொதுவாக தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி, மலேசியா விரைவில் கிருமியை துடைத்தொழிக்கும் Tecovirimat வைரஸ் தடுப்பு மருந்து (TPOXX) மற்றும் mpox வைரஸிற்கான MVA-BN தடுப்பூசி விநியோகத்தைப் பெறும் என்று Dzulkefly கூறியிருந்தார்.
காங்கோ (Congo) ஜனநாயகக் குடியரசில் Clade 1b என்ற புதிய வகை mpox கிருமிகள் அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து குரங்கம்மை நோய் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 14ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.