
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – சேமப்படையின் பயிற்சியாளரான 22 வயது சம்சுல் ஹரிஸ் சம்சுடின் ( Syamsul Hari Shamsudin) பயிற்சியின்போது மரணம் அடைந்தது தொடர்பாக நடத்தப்பட்ட உடற்கூறு பரிசோதனையில் பகடிவதைக்கான எந்தவொரு அடையாளமும் இல்லையென தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையில் அவர் துன்புறுத்தப்பட்டதன் காரணமாக எந்த காயங்களும் இல்லை. பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் வாக்குமூலங்கள் உட்பட அனைத்து சாட்சிகளிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக காலிட் நோர்டின் கூறினார்.
பிரேத பரிசோதனையின் ஒட்டுமொத்த முடிவுகள் இரண்டு மாதங்களில் தெரியவரும். இருப்பினும், அனைத்து விசாரணைகளும் அதிகாரிகளின் வழக்கமான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப நடந்ததோடு , சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து தொடக்க உதவிகளும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். ஜோகூரில் உள்ள ராணுவ போர் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த பின்னர், ஜூலை 28 ஆம் தேதி கோத்தா திங்கி மருத்துவமனையில் Syamsul Haris இறந்ததாக கூறப்படுகிறது.
அவரது தாயார் உம்மு ஹைமான் பீ டவ்லாட்குன் ( Ummu Haiman Bee Daulatgun ) ஆகஸ்டு 11 ஆம் தேதி தனது மகனுக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையைக் கோரியதோடு மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய தனது மகனின் கல்லறையை மீண்டும் தோண்ட முன்வருவதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பான அறிக்கை உயர்க்கல்வி அமைச்சின் மூலம் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காலிட் நோர்டின் தெரிவித்தார்.