
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான்.
ஜூலை 16-ஆம் தேதி மெர்லிமாவ், Jalan Debunga சாலைச் சந்திப்பில் அதிகாலை 2 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கருப்பு – சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் தம்மை நெருங்கிய சந்தேக நபர், தான் ஒரு போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, மோட்டார் சைக்கிளோட்டும் உரிமத்தையும் கேட்டதாக, பாதிக்கப்பட்ட 19 வயது பெண் முன்னதாக போலீஸில் புகார் செய்தார். அப்பெண்ணின் மோட்டார் சைக்கிள் சாவியையும் அந்நபர் பிடித்து இழுக்க முயன்றார்.
வாகனமோட்டும் உரிமத்தைத் தர மறுத்த அப்பெண், வேண்டுமென்றால் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்திற்கே சென்று ‘பஞ்சாயத்தை’ வைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
இதனால் கலவரமடைந்த அவ்வாடவன் விருட்டென அங்கிருந்து கிளம்பிச் சென்றான். இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் Telok Mas தொழிற்பேட்டை அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவன் கைதானான்.
பாதிக்கப்பட்ட பெண்ணை வெறுமனே மிரட்டுவதற்காகவே அவ்வாறு செய்ததாக விசாரணையில் கூறிய அவ்வாடவன், ஏற்கனவே 2 முறை போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டான்.
அவனது மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்த போலீஸ், விசாரணைக்காக அவனை 3 நாட்கள் தடுத்து வைத்துள்ளது.