
மெல்பர்ன், ஏப்ரல் – 12- APK2.0 எனப்படும் ஆட்டம்-பாட்டம்-கோலாட்டம் எனும் கலாச்சார – உணவுத் திருவிழா ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் ஏப்ரல் 6-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
அடுத்தத் தலைமுறைக்கு வளமான கலாச்சாரம், மதிப்புமிக்க பண்பாட்டுக் கூறுகள் மற்றும் பாரம்பரியத்தை விட்டுச் செல்லும் நோக்கில், மெல்பர்ன் இந்தியக் கலாச்சார சங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
மெல்பர்னில் வாழும் மலேசிய-சிங்கப்பூர் இந்திய வம்சாவளியினர் 500 பேர் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.
பரதநாட்டியம், கோலாட்டம், பறையிசை, மலாக்கா பெரானாக்கான் சீனர்களின் படைப்பு என ஏராளமான கலைப்படைப்புகள் வந்திருந்தவர்களைக் கவர்ந்தன.
நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக, மலேசியாவின் பிரபல நாதஸ்வர-தவில் இரட்டையர்களான கார்த்திகேசன் -கணேசனின் வாசிப்பு இடம்பெற்றது.
தமிழ் பாரம்பரிய இசையுடன், சினிமா பாடல்கள், குத்துப் பாடல்கள் என இருவரும் மண்டபத்தில் இருந்தவர்களை மகிழ்வித்தனர்.
இது மலேசிய இசைக் கலைஞர்கள் குறிப்பாக பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரமாகும்.
இந்த மெல்பர்ன் வாய்ப்பு குறித்து பெருமிதம் தெரிவித்த கணேசன், இந்தியர்கள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் நமது கலாச்சாரம் தொடர்ந்து பேணி காக்கப்படுவது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த ஆட்டம்-பாட்டம்-கோலாட்டம் நிகழ்வில், மலேசிய-சிங்கப்பூர் உணவுத் திருவிழாவும் வருகையாளர்களைக் கவர்ந்தது.