
மெல்பர்ன், மார்ச்-9 – ஆஸ்திரேலியா கம்பன் கழகத்தின் மெல்பர்ன் கம்பன் விழாவில், ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்புப் பிரமுகராகக் கலந்துகொண்டு பேருரரை ஆற்றினார்.
“கம்பனும் கண்ணதாசனும்” எனும் தலைப்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழையும், கவியரசு கண்ணதாசனின் பெருமையையும் பற்றிப் பேசியதில் தாம் பேரின்பம் அடைவதாக அவர் வருணித்தார்.
காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு – அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!
என்று கம்பனுக்குப் புகழ் மாலை சூட்டி அழகு பார்த்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் கவிதைகளை நேசித்ததாலே நான் கம்பனை வாசிக்கத் தொடங்கினேன் என சரவணன் தமதுரையில் குறிப்பிட்டார்.
தமிழுக்கு வார்த்தைகளைத் தந்தது கம்பனென்றால், அந்த வார்த்தைகளை எளிமையாக்கி பாமரருக்கு தந்தது கண்ணதாசன்.
இந்த மாபெரும் தமிழறிஞர்களைப் பற்றிப் பேச கடல்கடந்து தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக அவ்வாய்ப்பைப் கருதுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் ஆற்றிய உரையால் கம்பன் விழாவே களைக் கட்டியது.
அவரின் தமிழாற்றலும் இலக்கியத்தின் மீதான ஈடுபாடும் கண்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரும் ஏற்பாட்டாளர்களும் மெய்மறந்து போயினர்.