
ரமல்லா, டிசம்பர் 27-மேற்கு கரையில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், இஸ்ரேல் ரிசர்வ் படைவீரர் ஒருவர், சாலையோரத்தில் தொழுகையில் இருந்த பாலஸ்தீனரை தனது வாகனத்தால் மோதியுள்ளார்.
சாதாரண உடையிலிருந்த அவ்வீரர், தொழுகையிலிருந்தவரை மோதித் தள்ளி விட்டு, அவ்விடத்தை விட்டுச் செல்லுமாறு கத்துவது வீடியோவில் தெரிகிறது.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் கண்டனத்தைப் பெற்ற நிலையில், இஸ்ரேலிய இராணுவம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வீரரின் சேவை நிறுத்தப்பட்டு, ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் இதை “கடுமையான விதிமீறல்” என கூறியுள்ளனர்.
இவ்வேளையில் மோதப்பட்ட ஆடவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
தொழுகையில் இருந்த ஆடவரை குறிவைத்து தாக்கியதால், பாலஸ்தீனர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளதோடு,
மேற்கு கரையில் நிலவும் பதற்றத்தை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்துகிறது.



