புத்ராஜெயா, அக்டோபர்-14 – ஊழல் பணத்தைப் பாதுகாப்பாக மறைத்து வைப்பதற்காக, செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஒருவர் பயன்படுத்தி வந்த மேலுமிரண்டு ‘safe house’ வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதிலும், அந்நிய நாணயத்தில் 321,000 ரிங்கிட் உள்ளிட்ட ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதை, மலேசிய ஊழல் தடுப்பாணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி ( Tan Sri Azam Baki) உறுதிபடுத்தினார்.
ஒரு வீட்டில் 243,000 ரிங்கிட்டும், மற்றொன்றில் 78,000 ரிங்கிட்டும் கைப்பற்றப்பட்டன.
விசாரணைகள் மற்றும் சந்தேக நபர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில், அவ்வீடுகளில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.
குறிப்பிட்ட அளவுக்கு, சிங்கப்பூரில் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும் அது குறித்து மேல் விவரங்களை அசாம் பாக்கி வெளியிடவில்லை.
லஞ்சப் பணம் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது; அது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றாரவர்.
சிலாங்கூரில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் ‘பாதுகாப்பான இடமாக’ கோலாலம்பூரில் செயல்பட்டு வந்த அடுக்குமாடி வீட்டில் முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாட்டு நாணயத்தில் 50 லட்சம் ரிங்கிட் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் குத்தகை ஊழல் தொடர்பில் அண்மையில் இருவர் கைதானதன் அடிப்படையில் அந்த அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.