
போனஸ் அயர்ஸ், அக்டோபர்-17,
தென்னமரிக்க நாடான
அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில், ஆங்கிலத்தில் killer whale என்றழைக்கப்படும் 26 ஓர்கா திமிங்கிலங்களின் மர்மச் சாவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திமிங்கிலங்கள் அரிய வகையான Type D Orcas என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடலில் குறிப்பிடத்தக்க காயங்கள், மீன்பிடி வலைகளில் சிக்கியத் தடயங்கள் அல்லது மனித காரணங்கள் எதுவும் தென்படவில்லை.
அந்த 26 திமிங்கிலங்களில் பல ஒரே நேரத்தில் இறந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வு உலகளவில், 1955, 2022-ஆம் ஆண்டுகளுக்கு இப்போது மூன்றாவது முறையாக பதிவாகியுள்ளது.
கடல் உயிரியல் நிபுணர்கள் தற்போது மரணப் பரிசோதனை (necropsy) மற்றும் திசு மாதிரிகள் சேகரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்; நோய், சுற்றுச்சூழல் மாற்றம் அல்லது வழி தவறல் ஆகியவை காரணமாக அச்சம்பவம் நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஓர்க்காக்கள் பயங்கர வேட்டை விலங்காகக் கருதப்படுவதாலேயே ‘கொலைக்கார திமிங்கிலம்’ (killer whales) என அழைக்கப்படுகின்றன.
ஆனாலும், அவை மனிதர்களைக் கொன்றதாக இதுவரை ஆதாரங்கள் இல்லை.
ஆங்காங்கே சில தாக்குதல் சம்பவங்கள் மட்டும் பதிவாகியுள்ளன.