
கோலாலம்பூர், அக்டோபர்-21, தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் வரும் மோசமான விமர்சனங்களுக்கு காது கொடுத்தால், வாழ்க்கையில் சாதிக்க முடியாது.
அவற்றைத் தூக்கிப்போட்டு விட்டு, முன்னேற்றத்திற்கான முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தின் Zee தமிழ் தொலைக்காட்சியின் பிரபல பாடல் திறன் போட்டியான சரிகமப நிகழ்ச்சியின் மூலம் தடம்படித்து, நமக்கெல்லாம் பெருமைச் சேர்த்த அருளினியின் தன்முனைப்பான வார்த்தைகள் அவை.
இறுதிச் சுற்று வாய்ப்பைத் தவற விட்டாலும், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தமிழர்களிடையே பெரும் பிரபலமடைந்துள்ள 22 வயது அருளினி, சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பினார்.
அவரை வரவேற்று கொண்டாடும் விதமாக MMM எனப்படும் மண்ணின் மைந்தன் மலேசியா ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அருளினி அவ்வாறு கூறினார்.
Autism குறைபாடு இருந்தாலும், தனது பாடும் திறனால் நீதிபதிகளையும் சகப் போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தவர் அருளினி.
வெளிநாட்டிலிருந்து சென்றாலும், அங்குள்ளவர்களுக்கு ஈடாக போட்டியில் பங்கேற்ற அனுபவம், சந்தித்த சவால்கள், கற்றுக் கொண்ட பாடம் என பல விஷயங்களை அந்நிகழ்வில் அவர் பகிர்ந்துகொண்டார்.
அருளினியின் அடைவுநிலையைப் பாராட்டும் வகையில் கேக் வெட்டப்பட்டதோடு, அவர் முகம் பொறித்த canvas சுவரோவியமும் பரிசளிக்கப்பட்டது.
கோலாலம்பூர் Cinefest-டில் நேற்று மாலை நடைபெற்ற அந்நிகழ்வில் அருளினியின் நலம்விரும்பிகள், குடும்பத்தினர், உள்ளூர் கலைஞர்கள், ஊடக நண்பர்கள் என சுமார் 50 பேர் பங்கேற்றனர்.