
புது டெல்லி, டிசம்பர்-6 – வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர் முஹமட் யூனுஸ் (Muhammad Yunus) இனப்படுகொலை செய்வதாக, நாடு கடந்து வாழும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜீட் (Sheikh Hasina Wajeed) குற்றம் சாட்டியுள்ளார்.
இந்துக்கள், மற்றும் இதர சிறுபான்மையினரை இடைக்கால அரசு பாதுகாக்கத் தவறிவிட்டது.
மிகவும் நுட்பமான முறையில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதாக, இணையம் வாயிலாக தனது ஆதரவாளர்களிடம் பேசிய போது, யூனுஸ் மீது ஹசீனா சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
ஆகஸ்டில் பதவி துறந்து நாட்டை விட்டு விட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு, ஹசீனா பொது வெளியில் பேசுவது இதுவே முதன் முறை.
இவ்வேளையில், வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் இனவெறித் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அதனை மலேசியா சார்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகக் கண்டிக்க வேண்டுமென, செனட்டர் Dr ஆர். லிங்கேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எந்தவொரு பாகுபாடுமின்றி, அந்தத் தெற்காசிய நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக வலுவாக குரலெழுப்ப வேண்டியது நமது கடமையென, மேலவையில் பேசிய போது Dr லிங்கேஷ் வலியுறுத்தினார்.
வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்து, பிரதர் பதவியைத் துறந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டே ஓடியதிலிருந்து, சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், சேதப்படுத்துதல், தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் கூட இந்து மத குருக்கள் அடுத்தடுத்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேச இந்துக்கள், ஷேக் ஹசீனா தலைமையிலான லீகா அவாமி (Liga Awami) கட்சியின் விசுவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேச மக்கள் தொகையில் சுமார் 8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 31 லட்சம் பேர் இந்துக்கள் ஆவர்.