
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-16-தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுக்கப்பட்டாலும், அது இந்தியச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தியே இருக்கும்.
ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
80-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் பழம் பெரும் கட்சியான ம.இ.காவுக்கு, தேசிய முன்னணி ஒன்றும் பரம விரோதி அல்ல.
தற்போதும் உறவு நல்ல நிலையிலேயே நீடிப்பதாக, விக்னேஸ்வரன் சொன்னார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்தும் ம.இ.கா நன்கு அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தைப்பூசத்திற்குப் பிறகு மத்திய செயலவை கட்சியின் எதிர்காலத்தை முடிவு செய்யுமென்றார்…
India Gate உணவகத்தின் 12-ஆவது கிளையை இன்று பெட்டாலிங் ஜெயாவில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த நிகழ்வுக்குப் பிறகு விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.
இதனிடையே, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனும், விக்னேஸ்வரனின் கருத்தை ஆமோதித்தார்.
தலைநகரில் இன்று அம்னோ பொதுப் பேரவையின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு சரவணன் அவ்வாறு சொன்னார்.
முன்னதாக அம்மாநாட்டில் கொள்கையுரையாற்றிய அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, ம.இ.காவும் மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவும் மனக்கசப்புகளை மறந்து தேசிய முன்னணியில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
கூட்டணிக் கட்சிகளுக்குள் ‘சகோதர சண்டை’ வருவது இயல்புதான் என்றும், எனவே நடந்தவற்றை மறந்து விட்டு, அவ்விரு மூத்தக் கட்சிகளும் அம்னோவுடன் இணைந்து தேசிய முன்னணியை வலுப்படுத்த வேண்டுமென, துணைப் பிரதமருமான சாஹிட் வலியுறுத்தினார்.



