
குவாந்தான், ஏப்ரல்-13, ரவூப்பில் உள்ள ஒரு தோட்டத்தில் சட்டவிரோதமாக நடப்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்களை அகற்றும் அமலாக்க நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டதாக கூறப்படுவதை, பஹாங் போலீஸ் மறுத்துள்ளது.
அந்நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுவதற்கு மாநில அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில் லை.
எனவே, சமூக ஊடகங்களில் வைரலான குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என, பஹாங் போலீஸ் தலைவர் யஹாயா ஓத்மான் கூறினார்.
இந்நடவடிக்கை தொடர்பாக பஹாங் மாநில அமுலாக்கப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி, போலீஸ், மற்றும் ஒரு அரசு சாரா நிறுவனத்திடமிருந்து 3 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுத்ததன் பேரில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
முன்னதாக, சுமார் 25 வினாடிகள் நீடிக்கும் ஒரு வீடியோ வைரலானது.
அதில், சில இராணுவ வாகனங்கள், மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக ஒரு பகுதி வழியாக நகர்வது தெரிந்தது.
பல தசாப்தங்களாக தாங்கள் நட்டு பராமரித்து வரும் பயிர்களை அமுலாக்கப் பணியாளர்கள் அழித்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட தோட்டக்காரர்கள் பாதைகளைத் தடுத்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளைக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
எனினும், எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களும் இல்லாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை ரவூப்பில் உள்ள சுங்கை கிளாவில் 200 மூசாங் கிங் டுரியான் மரங்களை வெட்டியதில், நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை என பஹாங் அரசும் முன்னதாக தெளிவுப்படுத்தியிருந்தது.
நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதால், ஆக்கிரமிப்பைச் சமாளிக்க மரங்களை வெட்ட முடிவு செய்தோம் என பஹாங் அரசின் சட்ட ஆலோசகர் கூறியிருந்தார்.