
ஹோனோலுலு, ஜூலை-30- ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா, அலாஸ்காவின் (Alaska) சில பகுதிகள் சுனாமி எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் அமெரிக்க மேற்கு கடற்கரை முழுவதுக்கும், ஹவாய் மாநிலத்திற்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஹவாய் நேரப்படி பிற்பகல் 1.24 மணிக்கு கிழக்கு ரஷ்ய கடற்கரையிலிருந்து கிழக்கே சுமார் 85 மைல் தொலைவில் ஏற்பட்டது.
அந்த அளவிலான நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு கூட பேரழிவை ஏற்படுத்தும் சுனாமியைத் தூண்டியிருக்கலாம் என, பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறுகிறது.
அவ்வகையில், வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் சில கடற்கரைகளில் அலை மட்டத்திலிருந்து 9 அடிக்கு மேல் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிலநடுக்கத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஹவாய், ஜப்பான் மற்றும் குவாமின் (Guam) சில கடற்கரைகளில் 3 முதல் 9 அடி அல்லது 1 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் அலைகள் ஹவாய் நேரப்படி மாலை 7 மணியளவில் அதாவது மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஹவாயை அடையும் என தெரிவிக்கப்பட்டது.