
லங்காவி, டிசம்பர்-20 – நாட்டிலுள்ள இந்து ஆலயங்களும் அமைப்புகளும் இந்து மத வளர்ச்சிப் பணியை மேற்கொள்ளவதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
ஒன்றுபட்டால் இன்னும் நிறைய சாதிக்கலாம் என, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறினார்.
மஹிமாவின் roadshow சந்திப்புப் பயணமாக லங்காவியில் 4 ஆலயங்களுக்கு சிறப்பு வருகை மேற்கொண்ட பிறகு அவர் அதனை வலியுறுத்தினார்.
செலாட் பஞ்சோரில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ மகா சுப்ரமணிய தேவஸ்தானம் ஆகியவையே அந்நான்கு ஆலயங்களாகும்.
சென்ற ஒவ்வோர் ஆலயத்திலும் சிவகுமார் தலைமையிலான குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு, சிறப்பு விழாவிலும் பங்கேற்றார்.
ஆலயம்களின் அழகிய கட்டமைப்பையும், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
குறிப்பாக தேவார வகுப்புகள் மற்றும் இந்து மதக் கல்வி முயற்சிகளை அவர் சுட்டிக் காட்டினார்.
ஆலய நிர்வாகங்களுடனான சந்திப்பில் நில பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், மஹிமாவும் தன்னால் ஆனதை செய்ய உறுதியளிப்பதாகவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் ஹனுமான் ஜெயந்தி கொண்டாட்டமும் சேர்ந்துகொண்டதால், பக்தர்களுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டது அந்த நாளை மேலும் பாக்கியமாக்கியதாக சிவகுமார் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் மஹிமாவின் இந்த லங்காவி பயணம் அதன் நோக்கத்தை அடைந்ததாக அவர் தெரிவித்தார்.



