
செலாமா, பேராக், ஆகஸ்ட் 1 – நேற்று, பேராக் இலாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் மற்ற தமிழ்ப்பள்ளிகளுடன் கைகோர்த்து, ‘கண்டலை காப்போம், இயற்கையை வாழ்விப்போம்’ எனும் கருப்பொருளில் மாநில அளவிலான கண்டல் காடுகளை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை குவாலா செபெத்தாங், மாத்தாங் சதுப்புநிலக் காடு கற்றல் மையத்தில் (PUSAT EKO-PELAJARAN HUTAN PAYA BAKAU LAUT) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படும் இயல்பான நடவடிக்கைகளை கடந்து, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்விற்கு கல்வி இலாகா அதிகாரி டாக்டர் மைசூல் ரஸ்டி பின் மெடின், தாப்பாக் வனத்துறை அதிகாரிகள் அபு பாக்கர் மற்றும் அப்துல் ரஃப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
வகுப்பினுள் நடத்தப்படும் பாடங்களைத் தாண்டி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை கல்வியினை கற்று கொடுக்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்வில் 24 பள்ளிகளைச் சார்ந்த 57 மாணவர்களும் 32 ஆசிரியர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
மாத்தாங் கண்டல் காட்டில் 1.5 கிலோ மீட்டர் வரையிலான நடைபயணம், கண்டல் வனங்களிலுள்ள மரங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றிய விளக்கங்கள், கண்டல் மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு அங்கங்களில் பங்கு பெற்று மாணவர்கள் கண்டல் காடுகள் தொடர்பான நேரடி அனுபவத்தையும் பெற்றனர்.
மாணவர்களுக்கு கண்டல் வனங்கள் குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதும் இந்நிகழ்வில் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
மேலும் கண்டல் வனங்களின் தனித்துவமான சூழலமைப்பை மையமாகக் கொண்டு, அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு ஆழமான புரிதலை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இத்தகைய ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் தமிழ்ப்பள்ளி மாணவர்களை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல், அவர்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கச் செய்வதற்கும் மாறுபட்ட துறைகளில் அவர்கள் கால்பதிப்பதற்கும் ஒரு ஆரம்ப புள்ளியாய் விளங்குகின்றன.