
கோலாலம்பூர், அக்டோபர்-18, இதய நோயாளிகளுக்கான சிகிச்சைக் கட்டணங்களை மறு ஆய்வு செய்யக் கோரும் தங்களின் பரிந்துரை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சுகாதார அமைச்சு இணங்கியிருப்பதை, தேசிய இருதயக் கழகம் IJN வரவேற்றுள்ளது.
KKM-முடனான கலந்தாய்வு தங்களுக்கும் நோயாளிகளுக்கும் கூட்டு நன்மையை கொண்டு வருமென IJN நம்பிக்கைத் தெரிவித்தது.
அரசு மருத்துமனைகளின் பரிந்துரையின் பேரில் IJN-னில் சிகிச்சைப் பெற வருவோருக்கான கட்டணங்களை 10-த்திலிருந்து 40 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு IJN நிர்வாகம் KKM-மிடம் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை செலவினங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கட்டண விகிதத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.
அதோடு, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு IJN-னில் சிகிச்சைக் கட்டணங்கள் உயர்த்தப்படவேயில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதன் நிர்வாகம் தெளிவுப்படுத்தியது.
IJN மக்களுக்குத் தொடர்ந்து மிகச் சிறந்த தரத்தில் இருதய சிகிச்சைகளை வழங்குவதற்கு அக்கட்டண உயர்வு அவசியமாகும்.
அதே சமயம் மக்களுக்கு ஒரேடியாக சுமையை கொடுத்து விடக் கூடாது என்பதிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
எனவே KKM-முடனான சந்திப்பில் அனைவருக்கும் தோதுவான ஒரு முடிவு எட்டப்படுமென எதிர்பார்ப்பதாக IJN கூறியது.