
செப்பாங், ஜனவரி-24 – நாடளாவிய நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கடப்பிதழ் அலுவலகங்கள், அடுத்த வாரம் தொடங்கி சனி-ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறந்திருக்கும்.
வாரக் கடைசி நாட்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் அங்கு சேவை முகப்பிடங்கள் செயல்படும்.
அதே சமயம் UTC எனப்படும் புறநகர் உருமாற்ற மையங்களில் செயல்படும் கடப்பிதழ் முகப்பிடங்கள் வார நாட்களில் இரவு 7 மணி வரையிலும், சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5 மணி வரைக்கும் திறந்திருக்கும்.
ஜோகூர், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் UTC மையங்களில் உள்ள கடப்பிதழ் முகப்பிடங்கள், வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் மாலை 5 மணி வரை செயல்படும்.
குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுவதாக, உள்துறை அமைச்சு கூறியது.
விண்ணப்பத்தாரர்கள், நேரடியாக முகப்பிடச் சேவைகளை நாடலாம் அல்லது இணையம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
என்றாலும், வாரக் கடைசியில் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க எண்ணுவோர், இயன்ற வரை நேரடியாக கடப்பிதழ் முகப்பிடங்களுக்கே செல்லுமாறும், வார நாட்களில் விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளோர் இணையம் வாயிலாக அவ்வாறு செய்யலாமென்றும் அவர் சொன்னார்.