Latestஇந்தியா

வங்காளதேசத்தில் தூங்கிகொண்டிருந்த இந்து இளைஞர் தீ வைத்து எரிப்பு; இந்தியா கடும் கண்டனம்

புது டெல்லி, ஜனவரி-27-வங்காளதேசத்தில் மீண்டுமோர் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா கடும் கவலைத் தெரிவித்துள்ளது.

தூங்கிக் கொண்டிருந்தபோது 25 வயது அவ்விளைஞர் தீ வைத்து கொல்லப்பட்ட இச்சம்பவம், சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்புவதாக, இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.

இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான ஓராண்டுக்கும் மேலான இந்த ஆட்சிக் காலத்தில், சுயேட்சை மதிப்பீடுகளின் படி, இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரைக் குறி வைத்து 2,900-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் கொலைகள், தீ வைத்து தாக்குதல், நிலத் திருட்டு போன்றவை அடங்கும்; இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், தொடர் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் டாக்கா தோல்வி கண்டிருப்பதாகவும் புது டெல்லி சாடியது.

இந்த ஆகக் கடைசி சம்பவம், அந்த இஸ்லாமிய நாட்டில் அண்மையக் காலத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் குறிவைக்கப்பட்ட மூன்றாவது சம்பவமாக அமைந்துள்ளது.

இது போன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள், சிறுபான்மை சமூகங்களில் குறிப்பாக இந்துக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.

போலீஸார் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், மனித உரிமை அமைப்புகள், சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய கடுமையாக வலியுறுத்துகின்றன.

முஸ்லீம் நாடான வங்காளதேசத்தில், மொத்த மக்கள் தொகையில் சுமார் 8 விழுக்காடு அல்லது 13.1 மில்லியன் பேர் இந்துக்கள் ஆவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!