வட்டார நடுநிலை குறைவதால் ஆசியான் மேலும் ஒன்றுபட வேண்டும்; மலேசியா வலியுறுத்து

கோலாலம்பூர், அக்டோபர்-25 – வல்லரசு நாடுகளின் போட்டி காரணமாக தென்கிழக்காசியாவின் ‘நடுநிலை நிலைப்பாடு’ குறைந்து வருவதால், ஆசியான் நாடுகள் ஒன்றுபட்டு இருக்க வேண்டுமென மலேசியா வலியுறுத்தியுள்ளது.
கோலாலம்பூரில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய போது, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான், அதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான போட்டி, சுயேட்சையாக செயல்படும் ஆசியானின் ஆற்றலைப் பாதிக்கிறது என அவர் எச்சரித்தார்.
ஆசியான் அமைப்பின் வலிமையே அதன் ஒற்றுமையிலும் மையத்துவத்திலும் தான் உள்ளது; எனவே வட்டார மற்றும் அனைத்துலக விஷயங்களில் ஆசியானின் இருப்பை உறுதிச் செய்ய அதன் உறுப்புநாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என மொஹமட் ஹசான் வலியுறுத்தினார்.
தற்போது ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் மலேசியா, வட்டார அமைதி, நிலைத்தன்மை மற்றும் சமச்சீரான தூதரகத் தொடர்புகளை பேண உறுதியாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
இன்று தொடங்கும் இந்த 2-நாள் ஆசியான் மாநாடு, நாளை அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் வருகையால் களைக் கட்டவிருக்கிறது.



