
புத்ராஜெயா, ஜனவரி-28, சீனப் புத்தாண்டுக்கு அரசாங்கம் வழங்கும் 2-நாள் பொது விடுமுறைக்கு மேற்பட்டு கடைகளை மூடும் முதலாளிமார்கள், அக்காலக்கட்டத்தில் தொழிலாளர்கள் ஆண்டு விடுமுறையை எடுக்கவோ அல்லது சம்பளமில்லா விடுப்பை எடுக்கவோ கட்டாயப்படுத்தக் கூடாது.
மனிதவள அமைச்சான KESUMA அதனை நினைவுறுத்தியுள்ளது.
அந்த 2-நாள் பொது விடுமுறைக்கு முன்பும் பின்பும் ஆண்டு விடுமுறை எடுக்கவோ அல்லது சம்பளமில்லா விடுப்பு எடுக்கவோ தாங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக, தொழிலாளர்களிடமிருந்து நாங்கள் புகாரைப் பெற்றுள்ளோம்; இது சரியல்ல என அமைச்சு சுட்டிக் காட்டியது;
தங்களுக்கு எப்போது ஆண்டு விடுமுறை வேண்டுமென்பதை தொழிலாளர்கள் தான் முடிவுச் செய்ய வேண்டும்; அது அவர்களின் உரிமையாகும்.
மாறாக, வணிகச் செலவுகளைக் குறைக்க, தொழிலாளர்களை முதலாளிமார்கள் அவ்விஷயத்தில் கட்டாயப்படுத்தக் கூடாது என, இன்று வெளியிட்ட அறிக்கையில் KESUMA எச்சரித்தது.
எனவே, பொது விடுமுறை நாட்களுக்கு மேற்பட்டு வணிகங்களை மூடும் முதலாளிமார்கள், அக்காலக்கட்டத்தில் தங்களின் வருடாந்திர விடுப்பு அல்லது சம்பளத்தைக் குறைத்தால், தொழிலாளர்கள் அது குறித்து புகார் செய்யலாம்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 1955 தொழில் சட்டத்தின் கீழ் அருகிலுள்ள ஆள்பலத் துறை அலுவலகங்களில் அது குறித்து புகாரளிக்குமாறு அமைச்சுக் கேட்டுக் கொண்டது.