
அபுதாபி, டிசம்பர்-20 – பாலைவன நாடான ஐக்கிய அரபு சிற்றரசில் அரிதான புயல் மற்றும் மழை தாக்கியதில், துபாய், ஷார்ஜா ஆகிய பெருநகரங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் பெய்த கனமழை, முக்கிய சாலைகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, அதில் வாகனங்கள் சிக்கிய நிலையில், மக்கள் முழங்கால் ஆழம் நீரில் நடந்து சென்றனர்.
பாதுகாப்புக் கருதி, துபாய் போலீஸார் மக்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.
உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் அனைத்துலக விமான நிலையத்தில், ஏராளமான விமானங்கள் தாமதமடைந்தன அல்லது இரத்துச் செய்யப்பட்டன.
Emirates நிறுவனம் மட்டும் 13 சேவைகளை இரத்துச் செய்தது.
ஷார்ஜா விமான நிலையமும் பல சேவை இரத்துகளை அறிவித்தது.
இவ்வேளையில் பக்கத்து நாடான கட்டாரில் நடைபெற்ற முக்கிய கால்பந்து போட்டியும் கனமழையால் ஒத்திவைக்கப்பட்டது.
வறண்ட பாலைவன நாடுகளில் இத்தகைய கனமழை அரிதானது என்றாலும், காலநிலை மாற்றம் வளைகுடா பகுதியில் புயல்களை தீவிரப்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2024-ல் ஏற்பட்ட படுமோசமான வெள்ளத்திற்குப் பிறகு, அங்கு இது மீண்டும் கடுமையான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



