Latestமலேசியா

வழக்கறிஞரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம்; குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரிய மூவர்

ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-24 – அக்டோபர் 22-ஆம் தேதி ஒரு வழக்கறிஞரை இரும்புக் கம்பியால் தாக்கி காயம் விளைவித்ததாக, விற்பனை நிர்வாகிகளான மூன்று ஆடவர்கள் இன்று ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இன்னும் பிடிபடாமல் வெளியிலிருக்கும் இன்னோர் ஆடவருக்கு உடந்தையாக, 37 வயது Beh Hong Shien எனும் அந்த வழக்கறிஞரைத் தாக்கியதாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

எனினும், 36 வயது Koay Beng Ghee, 36 வயது Teh Eng Tat, 41 வயது Ng Weng Kooi மூவரும் அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி ஆகிய 3 தண்டனைகளில் குறைந்தது 2 தண்டனைகள் வழங்கப்படும்.

முன்னதாக, பார்வையாளராக வந்திருந்த வழக்கறிஞர் RSN ராயர், அத்தாக்குதல் ஒரு வழக்கறிஞருக்கு எதிராக, அதுவும் பட்டப் பகலில் நடத்தப்பட்டுள்ளதால், நீதிமன்றம் அக்குற்றத்தைக் கடுமையாகக் கருத வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவ்விவகாரத்தை தாம் ஏற்கனவே மக்களவையில் எழுப்பியிருப்பதைச் சுட்டிக் காட்டிய ராயர், பினாங்கில் வழக்கறிஞர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார்.

நீதிபதி கடைசியில் ஆளுக்கு 7,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் மூவரையும் ஜாமீனில் விடுவித்தார்.

வழக்கு ஜனவரி 13-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!