ஷா ஆலாம், டிசம்பர் 11 – வாகனமோட்டிகளின் பாதுகாப்பு மற்றும் சீரான பயணத்தை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு ஆண்டுதோறும் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க, மெகா சாலை சீரமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சாலைகளில் ஏற்படும் பழுது தொடர்பில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் அடிப்படையில், முக்கியமான சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து சீரமைக்கப்படும் என அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் (Izham Hashim) தெரிவித்தார்.
ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் கீழ் உள்ள சில சாலைகள் இப்போது மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய நிலையில், அடுத்தாண்டு RM50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் மெகா சாலை சீரமைப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சாலைகளின் வாழ்நாள் 20-25 ஆண்டுகளாக இருப்பதால், அவற்றை காலத்துக்கு ஏற்ப மேம்படுத்துதல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.