கோத்தா கெமுனிங், செப்டம்பர் -14, மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்குகளைப் பெறுவதற்காக பாஸ் கட்சி உறுப்பினர்கள் கலப்பினத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை கண்ணியமற்றதோடு அப்பத்தமானதும் கூட.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அவ்வாறு சாடியுள்ளார்.
மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை உரிமைகள், கண்ணியம் மற்றும் அபிலாஷைகள் கொண்ட மனிதர்களாகப் பார்க்காமல், அரசியல் கருவிகளாக மட்டுமே பாஸ் கட்சி பார்ப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
மலாய்க்காரர் அல்லாத சமூகத்தின் தேவைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதில் PAS கட்சியிடம் அக்கறையும் இல்லை, நேர்மையும் இல்லை என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.
அவர்கள் வாக்குகளை மட்டுமே பார்க்கிறார்கள், மக்களை அல்ல.
இனங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத பாஸ் கட்சியின் குறுகிய மனநிலையை இது எடுத்துக்காட்டுகின்றது.
திருமண பந்தமானது காதல், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும்; வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கேவலமான அரசியல் யுத்தியாக இருக்கக்கூடாது.
எனவே, சிலாங்கூர் பாஸ் இளைஞர்களின் வெட்கக்கேடான மற்றும் அவமானகரமான அப்பரிந்துரைக்கு ஆழ்ந்த வருந்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ளவதாக பிரகாஷ் தனறிக்கையில் கூறினார்.