வாடகை வீட்டு விளம்பரங்களில் இந்தியர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டை நிறுத்துங்கள்; மக்களவையில் உரக்கக் குரல் எழுப்பிய ஷெர்லீனா

கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – வீடுகளை வாடகைக்கு விடும் விளம்பரங்களில் இந்தியர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டுமென, மக்களவையில் உரக்கக் குரல் எழுப்பியுள்ளார் பினாங்கு புக்கிட் பேண்டேரா நாடாளுமன்ற உறுப்பீனர் ஷெர்லீனா அப்துல் ரஷீட்.
இவ்விவகாரம் குறித்து ஏற்கனவே வணக்கம் மலேசியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ஷெர்லீனா பேசியிருந்தது வைரலாகி, அவர் நாடாளுமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்ப வேண்டுமென பரவலாகக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தின் போது நேற்று ஷெர்லீனா இவ்விவகாரத்தை எழுப்பி கவனம் ஈர்த்தார்.
இது மலேசிய இந்தியர்கள் சந்திக்கும் ஒரு நீண்ட கால பிரச்னை எனக் குறிப்பிட்ட ஷெர்லீனா, இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.
ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் என வெறும் வாய் வார்த்தையாக பேசிக் கொண்டிருக்காமல், ஒரு தைரியமான நடவடிக்கையை மடானி அரசாங்கம் எடுக்க வேண்டும்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் தோல் நிறத்தை வைத்து குறிப்பிட்ட இனத்தை ஒதுக்குவது கொஞ்சமும் ஏற்புடையதல்ல; இதனை நிறுத்த வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அச்சட்டத் திருத்தத்திற்கு 68% மலேசியர்கள் ஆதரவளிப்பது அண்மைய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஷெர்லீனா வணக்கம் மலேசியாவுக்கு அளித்த பேட்டியின் போது வந்த சமூகத்தின் எதிரொலிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து இன்று மக்களவை வரை கொண்டு சென்றுள்ளது வரவேற்கக்கூடியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.