தோக்யோ, நவம்பர்-10, உலகப் புகழ்பெற்ற தனது Super Cub 50 மோட்டார் சைக்கிள் உற்பத்தியை அடுத்தாண்டு மே மாதத்தோடு நிறுத்துவதற்கு, Honda மோட்டார் நிறுவனம் முடிவுச் செய்துள்ளது.
2025 பிற்பகுதியில் ஜப்பானில் கடுமையான வாகன உமிழ்வு தரக்கட்டுபாடுகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதே அதற்குக் காரணம்.
50cc போன்ற குறைந்த ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் Honda நிறுவனம், புதியத் தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வந்தால் குறைந்த விலையில் மோட்டார் சைக்கிள்களை விற்பது கட்டுப்படியாகாது என கருதுகிறது.
இதையடுத்து, அந்த 50cc இயந்திர ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் கடைசி பதிப்பை (Final Edition) டிசம்பர் 12-ம் தேதி 1,950 டாலர் விலையில் அது விற்பனைக்கு விடுகிறது.
2,000 மோட்டார் சைக்கிள்களை விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவற்றை வாங்க விரும்புவோர், நவம்பர் 24 வரை முன்பதிவு செய்யலாம்.
என்றாலும், வரவேற்பைப் பொருத்து முன்பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாமென Honda கோடி காட்டியது.
எனினும் 110 cc ஆற்றல் கொண்ட Super Cub 110 மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து தயாரிக்கப்படும்.
1958-ஆம் ஆண்டு Super Cub தொடரை அறிமுகப்படுத்திய Honda, இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.