வாஷிங்டன், டிசம்பர்-9, அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் பழச்சாறு குடிப்பதெப்படி என செய்து காட்டியுள்ளார்.
பிரிட்டனின் நீதம் (Needham) ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்களுடனான மெய்நிகர் சந்திப்பின் போது சுனிதா காட்டிய செய்முறையின் வீடியோ வைரலாகி வருகிறது.
பூமியைப் போல் புவீ ஈர்ப்புச் சக்தியில்லாத விண்வெளியில், பானங்கள் அருந்துவது முற்றிலும் வித்தியாசமாகும்; அதற்கென தனிப் பயிற்சியை எடுத்துகொண்டுதான் விண்வெளிக்கே பயணமாவர்.
இந்நிலையில், சுனிதா பாக்கெட்டில் உள்ள அன்னாசிப் பழச்சாற்றை எப்படி அருந்துவது என செய்து காட்டினார்.
பழச்சாறு பேக்கெட்டை மேல்நோக்கி சுனிதா அழுத்த, ஒரு சிறு உருண்டை அளவில் அன்னாசி பழச்சாறு குமிழாக வெளியே வருகிறது.
அதனை அவர் வாயில் கவ்விக் கொள்கிறார்.
இப்படி கவ்விக் கவ்விக் ‘குடிப்பது’ கடினம் தான் என்றாலும், சில சமயங்களில் ஜாலியாக இருக்குமென அவர் சொன்னார்.
சுனிதாவும், சக அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் (Butch Wilmore) வரும் பிப்ரவரியின் Space X விண்கலம் மூலம் பூமி திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.