
ஃபுளோரிடா, மார்ச்-19 – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளார்.
சுனிதா, சக அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வரை ஏற்றியிருந்த Space X Dragon விண்கலம், மலேசிய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு ஃபுளோரிடா மாநிலக் கடலில் இறங்கி, மிதந்தது.
அனைத்துலக விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஏனைய இருவராவர்.
கடலின் மேற்பரப்பை நெருங்கியதும் பாராசூட்கள் விரிக்கப்பட்டு, splashdown என்ற முறையில் கடல் பகுதியில் விண்கலம் இறங்கியது.
படகுகளில் காத்திருந்த நாசாவின் மீட்புக் குழுவினர் 4 விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.
விண்கலத்திலிருந்து வெளியே வந்து, 9 மாதங்களுக்குப் பிறகு பூமியின் காற்றை சுவாசித்த சுனிதா, சிரித்தபடியே கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து 17 மணி நேர பயணமாக அவர்கள் பூமி வந்து சேர்ந்தனர்.
ஒரு வார ஆராய்ச்சிப் பயணமாக விண்வெளி சென்ற சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 9 மாதங்களாக அங்கேயே சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும், எதுவுமே பலனளிக்கவில்லை.
கடைசியாக கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கின் இந்த Space X விண்கலம் அம்முயற்சியில் இறங்கி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வந்துள்ளது.
விண்வெளியில் இருந்த இந்த 9 மாதங்களில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் 900 மணி நேரம் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு, 150 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.