
பத்து பஹாட், அக்டோபர்-21, ஜோகூர், பத்து பஹாட் பேருந்து முனையத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான வாகனங்களின் கண்ணாடி துடைப்பான்களை (wipers) உடைத்து சேதப்படுத்திய வெளிநாட்டு ஆடவன் கைதாகியுள்ளான்.
சம்பவ வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து 25 வயது அவ்விளைஞன் கைதானதாக, மாவட்ட போலீஸ் கூறியது.
பேருந்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களின் பின்பக்க wiper-களை அவன் பாட்டுக்கு தன் கையால் உடைத்து கொண்டே போவது அந்த வீடியோவில் தெரிந்தது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைதான போது அவன் முதுகில் மாட்டியிருந்த பையிலிருந்து மடக்கும் கத்தியும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, சதிநாச வேலை, அபாயகர ஆயுதம் வைத்திருந்தது, மற்றும் முறையான பயணப் பத்திரமின்றி இந்நாட்டில் தங்கியிருந்தது ஆகியக் குற்றங்களுக்காக அவன் மீது 3 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.