
சைபர் ஜெயா, ஜூலை 31- கடந்த செவ்வாய்க்கிழமை, சைபர் ஜெயா பல்கலைகழகத்தில், சிலாங்கூர் மாநில அளவிலான செந்தமிழ் விழா 2025 மிக கோலாகலாமாக நடைபெற்றது.
இவ்விழாவைத் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா.வின் துணைத் தலைவருமாகிய மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களிடையே தமிழ் பற்றையும் தமிழ் ஆளுமைத் திறனையும் மேலோங்கச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் இந்த செந்தமிழ் விழா ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு பின்பு தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இப்போட்டி மாணவர்களின் தனி ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு தலமாகவும் மாநில அளவில் தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டும் இடமாகவும் அமைந்து வருகின்றதென்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் தமிழ்மொழியை மாணவர்கள் மத்தியில் வேரூன்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சிலாங்கூர் மாநில செந்தமிழ் விழாவில், தமிழ்ப்பள்ளி, தேசியப்பள்ளி. இடைநிலைப் பள்ளி மற்றும் ஆறாம் படிவ கல்லூரி மாணவர்கள் உட்பட மொத்தம் 195 போட்டியாளர்கள் பங்குப் பெற்றனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் முதல்நிலையில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் டாஸ்லி நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் ரவி மற்றும் டத்தின் காவேரி தம்பதியர்கள் பட்டை கணினியை வழங்கி சிறப்பு செய்தனர்.