
சிப்பாங், ஜூலை 25 – கடந்த வியாழக்கிழமை, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2-ல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 198 வெளிநாட்டினர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் (AKPS) இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ முகமது ஷுஹைலி முகமது ஜைன் (Mohd Shuhaily Mohd Zain), கைது செய்யப்பட்டவர்கள் மலேசியாவிற்கு வருகை புரிந்ததற்கான தெளிவான காரணத்தையும் முன் வைக்க தவறி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் அனைவரும் ‘நோட் டூ லேண்ட்’ (NTL) என்ற அமலாக்கத்தின் அடிப்படையில், உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள் என்றும் இந்தப் பொறுப்பு விமான நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கைதானவர்களில் வங்காளதேசிகள், பாகிஸ்தானியர்கள், இந்தோனேசியர்கள், வியட்நாமியர்கள், மேலும் சிரியா மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆகிய அனைவரும் உள்ளடங்குவர் என்று அறியப்படுகின்றது.
பயணிகளின் கைபேசியைப் பரிசோதித்தபோது, அவர்கள் AKPS அதிகாரிகளின் படங்களைத் தனது கைபேசியில் தந்திரமாக வைத்திருந்தனர் என்ற அதிர்ச்சி தகவலையும் ஷுஹைலி வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் தெளிவான செய்தியை அனுப்பும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.