வியூக ஒத்துழைப்பை மேம்படுத்துதல்; பிரதமர் அன்வாரின் பிரிட்டன் பயணத்தில் முக்கியத்துவம்
லண்டன், ஜனவரி-16, பல்வேறு துறைகளில் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மலேசியாவும் பிரிட்டனும் விவாதித்திருக்கின்றன.
பணி நிமித்தப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மருடன் (Keir Starmer) லண்டனில் நடத்திய சந்திப்பின் போது அது குறித்து பேசப்பட்டது.
வியூக ஒத்துழைப்புக்கான துறைகளில் பொருளாதாரமே முதன்மையாக இருந்தாலும், தற்காப்பு, கல்வி உள்ளிட்ட அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படுவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
இது தவிர்த்து, பசுமைத் தொழில்நுட்பம், இலக்கவியல், AI அதிநவீன தொழில்நுட்பத் துறைகளிலும் ஆற்றலை பரிமாறிக் கொள்வது குறித்து பேசப்பட்டது.
ஒத்துழைப்பை விரைவுப்படுத்த இரு நாட்டு அமைச்சர்களும் உடனடியாகக் குழுக்களை அமைத்து செயலில் இறங்குவர்.
மலேசியா மட்டுமின்றி ஆசியான் கோணத்திலும் அவ்வொத்துழைப்பு இருக்குமென்றார் அவர்.
இவ்வாண்டு ஆசியான் கூட்டமைப்புக்கு மலேசியா தலைமையேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன், ஐரோப்பாவில் மலேசியாவின் நான்காவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும்.