
கோலாலம்பூர், மார்ச்-7 – இந்நாட்டில் வீட்டுக் காவல் தண்டனையை செயல்படுத்த புதிய சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியல்லை.
சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சயிட் அதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வீட்டையோ, கட்டடத்தையோ அல்லது இடத்தையோ சிறைச்சாலையாக அறிவிக்க, உள்துறை அமைச்சருக்கு நடப்பிலுள்ள சிறைச்சாலை சட்டமே அதிகாரத்தை வழங்குவதாக, தேசிய சட்டத்துறை அலுவலகம் கருதுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு கைதியை வீட்டுக் காவலில் வைக்க உள்துறை அமைச்சருக்கு அதிகாரமிருப்பதாக அசாலீனா விளக்கினார்.
சிறைக் கைதிகள் தங்களின் எஞ்சியத் தண்டனைக் காலத்தை வெளியில் அனுபவிக்க, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு விடுவிக்கப்பபடலாம்.
ஒருவேளை அந்நிபந்தனைகளை பின்பற்றத் தவறினால், கைதிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது மீண்டும் சிறைக்கே அனுப்பப்படலாம்.
டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழக்கைச் சுட்டிக் காட்டி, மலேசியாவில் வீட்டுக் காவலை அனுமதிக்க சட்டமுண்டா என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் மக்களவையில் கேட்ட கேள்விக்கு அசாலீனா அவ்வாறு பதிலளித்தார்.
15-ஆவது மாமன்னரின் ஆணைக்கேற்ப தன்னை வீட்டுக் காவலில் வைக்கக் கோரி அந்த முன்னாள் பிரதமர் சட்டப் போராட்டத்தில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
SRC ஊழல் வழக்கில் நிஜீப்பின் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பாதியாகக் குறைத்த அப்போதைய மாமன்னர், நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்கவும் கூடுதல் உத்தரவுப் பிறப்பித்ததாகவும், எனவே அதனை அமுல்படுத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்மென்றும் கோரி நஜீப் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.