
ஜோர்ஜ் டவுன் , செப் 2 – பினாங்கு இந்து இயக்கம் நான்காவது முறையாக நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சி வெற்றி பெற்றது.
இந்த நிகழ்ச்சியை பினாங்கு இந்து இயக்கம் , பினாங்கு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துடன் இணைந்து நடத்தியது.
இதுவரை மொத்தம் 10 திருமணங்கள் இத்திட்டத்தின் வாயிலாக நிறைவேறியுள்ளன.
கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட்டு 30 ஆம் தேதி பினாங்கு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சுயம்வரம் நிகழ்ச்சியில் திருமண விருப்பம் கொண்ட 112 ஆண்களும் பெண்களும் தங்களது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
கூடுதலாக 10 பேர் நேரடியாக பதிவு செய்து கலந்து கொண்டனர்.
பங்கேற்பாளர்களுக்கு அவர்களது சுயவிவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன்பின் பாரம்பரிய முறைக்கு ஏற்ப ஜோதிடர்களால் ஜாதக பொருத்தம் பரிசீலிக்கப்பட்டது.
ஜோதிடர்கள் அனுமதி வழங்கிய பிறகு, இரு குடும்பத்தினரும் சந்தித்துத் திருமண விவாதங்களை நடத்தி அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியை பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்மாக தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுக்கு மாநில அரசின் வீடமைப்பு திட்டங்கள் மூலம் வீடு கிடைக்க உதவுவதாக அவர் உறுதியளித்தார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், தமது உரையில், இத்திட்டத்தின் மூலம் திருமணத்தில் இணையும் தம்பதிகளுக்கு பினாங்கு இந்து அறநிறுவனத்தின் கீழ் உள்ள ஆலயங்களில் திருமணம் ஏற்பாடு செய்யும் மணமக்களுக்கு மண்டப வாடகைக்குத் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.