
வெளிநாட்டில் பிறந்த தங்களது பிள்ளைகளின் குடியுரிமைத் தொடர்பில் 6 மலேசியத் தாய்மார்களும் பொது மக்கள் சிலரும் செய்திருந்த மேல்முறையீடு, கூட்டரசு நீதிமன்றத்தில் எதிர்க்கப்படாமலேயே தீர்க்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்தவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட இணக்கத்தின் நிபந்தனைகளை, தான் ஸ்ரீ நளினி பத்மநாதன் உட்படகூட்டரசு நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய குழு அங்கீகரித்தது.
நீதிபதிகள் குழுவுக்கு நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் (Tengku Maimun Tuan Mat) தலைமையேற்றார்.
நான்காண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே நிலைநிறுத்த, தனது கட்சிக்காரர்கள் ஒப்புக் கொண்டு, மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டதாக, அவர்களின் வழக்கறிஞர் குர்டியால் சிங் நிஜார் ( Gurdial Singh Nijar) நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
அவ்வகையில், கடந்தாண்டு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பாக பிறந்த – இன்னமும் 18 மற்றும் அதற்குக் கீழான வயதுடையவர்களான அந்தக் குழந்தைகள், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 15 உட்பிரிவு 2-ன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
அச்சட்டப் பிரிவானது, தாய் தந்தையரில் குறைந்தது ஒருவர் மலேசியக் குடியுரிமை வைத்திருந்தால், 21 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகளை மலேசியக் குடியுரிமைப் பெற்றவர்களாகப் பதிவதற்கு அனுமதிக்கிறது.
சம்பந்தப்பட்ட தாய்மார்களும் அரசாங்கமும் அவ்வழக்கை நல்ல முறையில் தீர்த்துக் கொள்ள ஏதுவாக, கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி மேல்முறையீடு ஒத்திவைக்கப்பட்டது.