
கோலாலம்பூர், மார்ச்-7 – இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ள ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் ஏரா எஃ.எம் வானொலி அறிவிப்பாளர்களின் மன்னிப்பை, மலேசிய இந்து சங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
Radin, Azad, Nabil ஆகிய மூவரும் வருந்தி மனதார மன்னிப்புக் கேட்டிருக்கும் பட்சத்தில் அதனை நாங்களும் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், அந்த வீடியோவால் போதிய சேதாரம் நடந்து விட்டது; எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆக வேண்டுமென, மலேசிய இந்துக்களின் அதிகாரத் தரப்பான இந்து சங்கத்தின் தலைவர் T.கணேசன் கூறினார்.
தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவுப்படுத்திய அந்த வீடியோவால் மலேசிய இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கள் தவற்றை உணர்ந்து அம்மூவருடன் ஏரா வானொலி நிர்வாகமும், தாய் நிறுவனமான ஆஸ்ட்ரோவும் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
எனினும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஏரா அறிவிப்பாளர்கள் போலீஸ் மற்றும் மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.