
புக்கிட் ஜாலில், ஏப்ரல்-7- ஏரா மலாய் வானொலியின் காலை நேர அறிவிப்பாளர்களான ராடின், அசாட், நாபில் மூவரும் இன்று மீண்டும் தங்களது பணியைத் தொடங்கியுள்ளனர்.
தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவுப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், மூவரும் 1 மாதம் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ‘தீகா பாகி ஏரா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இன்று காலை 6 மணிக்கு அவர்கள் பணிக்குத் திரும்பியதை, ஏரா வானொலி உறுதிப்படுத்தியது.
டிக் டோக்கில் வைரலான சர்ச்சைக்குரிய வீடியோவால், மேலுமிரு பணியாளர்களோடு இம்மூவரும் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
காவடியாட்டத்தின் போது இந்துக்கள் உச்சரிக்கும் ‘வேல் வேல்’ சுலோகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அவர்கள் நடனமாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதற்காக பத்து மலை வரை சென்று இந்துக்களிடம் அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
ஏரா வானொலி நிர்வாகமும், அதன் தாய் நிறுவனமான ஆஸ்ட்ரோவும் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டன.
கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏராளமான போலீஸ் புகார்களும் செய்யப்பட்டன.
இந்நிலையில், மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC நடத்திய விசாரணைக்குப் பிறகு, Maestro Broadcast Sdn Bhd நிறுவனத்துக்கு 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால் அம்மூன்று அறிவிப்பாளர்கள் மீதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாது என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சிலும் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது