
கோலாலம்பூர், ஜன 31 – வைரஸ் X நாட்டிற்குள் சத்தமில்லாமல் கொண்டு வரப்பட்டதாகவும், சுகாதார சேவை ஊழியர்கள் தடுப்பூசியை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுவதை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. மேலும் சுகாதார சேவையிலுள்ள ஊழியர்களை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று தூண்டும் இடுகைகளையும் சமூக ஊடகங்களில் தனது தரப்பு கண்டறிந்ததாக சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அகமட் ( Dzukefly Ahmad ) தெரிவித்தார். இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையல்ல என்தோடு வைரஸ் x அல்லது தடுப்பூசி எதுவும் கிடையாது என அவர் கூறினார்.
மேலும் எந்தவொரு தரப்பும் அதன் ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சிற்கோ அல்லது வேறு எந்தவொரு அமைப்பிற்கும் முழு அதிகாரம் வழங்கவில்லை என்றும் Dzulkefly வலியுறுத்தினார். அதிகாரப்பூர்வ தளங்கள் , குறிப்பாக சுகாதார அமைச்சின் சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து மட்டுமே உண்மையான தகவல்களைப் பெறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது முகநூலில் பதிவில் அவர் கேட்டுக்கொண்டார். உலக சுகாதார நிறுவனமான (WHO) X வைரஸை ஒரு புதிய தொற்றுநோய் அச்சுறுத்தலாகக் கணித்திருந்த போதிலும் அந்நோயின் அபாயம் குறித்து பொதுமக்கள் அதிக கவலை அடையவேண்டாம் என 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் ராட்ஷி அபு பாக்கார் ( Radzi Abu Bakar ) கூறியிருந்தார்.