ஷா ஆலாம், செப்டம்பர்-26 – ஷா ஆலாமில் நேற்று பிற்பகல் 2 மணி தொடங்கி பெய்த அடைமழையால் Jalan Kebun, Seri Muda, Kota Kemuning போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
சில இடங்களில் வெள்ள நீர் மட்டம் 0.6 மீட்டர் ஆழத்திற்கு இருந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
அந்தந்த பகுதிகளில் தீயணைப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்றிரவு வரைக்குமான தகவலின் படி நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
யாரும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்படவில்லை; வெள்ள நீரும் வற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
Jalan Kebun மற்றும் Kota Kemuning பகுதிகளில் முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகின.
ஏராளமான குடியிருப்பாளர்களின் வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டதை காண முடிந்தது.
பருவநிலை மாற்றம் செப்டம்பர் 24 தொடங்கி நவம்பர் வரை நீடிக்குமென, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.