
ஷா ஆலாம், டிசம்பர் 23-மலேசியத் தமிழ் விவசாயத் தொழில்முனைவோர் சங்கத்தின் நான்காமாண்டு விழா இன்றும் நாளையும் ஷா ஆலாமில் உள்ள மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி, உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழ் தொழில்முனைவோர்களையும் வணிகத் தலைவர்களையும் ஒன்றிணைக்கிறது.
முதல் முறையாக மலேசியாவில் நடைபெறும் அனைத்துலக தமிழர் வணிக மாநாடு 2025 மற்றும் அனைத்துலக கம்பு உணவு விழா ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும்.
கம்பு உணவின் ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இவ்விழாவில், பல்வேறு கம்பு உணவுகள், கண்காட்சிகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மாநாட்டில் பங்கேற்க வந்த நியூ யோர்க்கைச் சேர்ந்த அமெரிக்க தமிழ் சங்க நிறுவனரும் தலைவருமான கலைமாமணி Dr பிரகாஷ் M சுவாமி உள்ளிட்ட பேராளர்கள், வணக்கம் மலேசியாவுடன் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தொழில்நுட்பம், AI, நிதி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் உலகலாய வர்த்தக ஆய்வரங்கு, தொழில்முனைவோருக்கான மாஸ்டர்கிளாஸ், தொடர்புகளை வளர்த்துகொள்ளும் அங்கங்கள் ஆகியவற்றோடு Gala விருந்தும் & விருது வழங்கும் விழாவும் இடம்பெறுகின்றன.



