இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி-14, ஜோகூர், ஸ்கூடாய், Bandar Selesa Jaya-வில் உள்ள வீட்டொன்றில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை, 24 மணி நேரங்களுக்குள் போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
ஜனவரி 5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வீட்டில் பொருட்கள் எல்லாம் அலங்கோலமாக சிதறிக் கிடந்ததாகவும், விலையுயர்ந்த பொருட்களுக்கும் காரும் காணாமல் போனதாகவும் 55 வயது ஆடவர் முன்னதாக போலீஸில் புகார் செய்திருந்தார்.
இதையடுத்து உடனடி விசாரணையில் இறங்கிய போலீஸ், அதே நாள் மாலை 4.20 மணிக்கு கேலாங் பாத்தா, தாமான் முத்தியாரா உத்தாமாவில் 35 வயது சந்தேக நபரைக் கைதுச் செய்தது.
அவனிடமிருந்து ஒரு Perodua Alza கார், ஒரு கத்தி, வீட்டை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட 7 கருவிகள், 43 பண நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பூட்டப்படாத வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதே அவனது வாடிக்கையென, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம்.குமரேசன் கூறினார்.
திருடனுக்கு 5 போதைப் பொருள் சம்பவங்கள் உட்பட ஏற்கனவே 13 குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது; சிறுநீர் பரிசோதனையில் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதியானது.
ஜனவரி 17 வரை விசாரணைக்காக அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.