
சிப்பித்தாங், ஆகஸ்ட்-10 – முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மஹாதீரின் (Zara Qairina Mahathir) மரணம் தொடர்பான விசாரணையை முழுமைப் பெறச் செய்ய ஏதுவாக, அவரின் சடலம் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.
அதன் போது சிப்பித்தாங், Kampung Mesapol முஸ்லீம் மையத்துக் கொல்லையில், புருணை, லாபுவான் மற்றும் சிலாங்கூரிலிருந்து வந்திருந்த 60-க்கும் மேற்பட்ட உறவினர்கள் அங்குக் கூடியிருந்தனர்.
சபா இஸ்லாமிய சமயத் துறை, அரசியல்வாதிகள், பொது மக்களும் வந்திருந்தனர்.
சாராவின் சடலம் இன்று கோத்தா கினாபாலு Queen Elizabeth மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிகிறது.
பாப்பாரில் உள்ள பள்ளித் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் சாரா, ஜூலை 16-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மறுநாள் Queen Elizabeth மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார்.
சாரா பகடிவதைக்கு ஆளாகியிருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என சபா போலீஸ் ஆணையர் முன்னதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் தங்கள் விசாரணையை முடிக்க கூடுதல் தகவல்களையும் ஆதாரங்களையும் பெறுவதை உறுதிச் செய்ய பிரேத பரிசோதனை அவசியம் என AGC எனப்படும் சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் கூறியிருந்தது.
அம்மாணவியின் மரணம் குறித்த போலீஸாரின் முதற்கட்ட அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு, இந்த விஷயத்தை மேலும் விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், சாராவின் சடலத்தைத் தோண்டியெடுக்க வெள்ளிக்கிழமை AGC உத்தரவிட்டது.