ஸ்ரீ கெம்பாங்கான், அக்டோபர்-15 – சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் வீட்டுக்கு வந்து தங்கிய காதலியை, குடிபோதையிலிருந்த காதலன், சரமாரியாகத் தாக்கியுள்ளான்.
இம்மாதத் தொடக்கத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மனிதவள உதவியாளராகப் பணிபுரியும் அப்பெண் போலீசில் புகார் செய்தார்.
8 மாதங்களாக காதலித்து வரும் இருவரும், அக்டோபர் 5-ஆம் தேதி ஜோடியாக கேளிக்கைப் பூங்காவுக்குச் செல்ல திட்டமிட்டனர்.
இதனால், முதல் நாள் இரவே காதலனின் வீட்டுக்குச் சென்று அப்பெண் தங்கி விட்டார்.
இரவு உணவுக்காக நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு திரும்பியதும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே, எத்தனை மணிக்கு அலாரம் வைப்பது என அப்பெண் கேட்டதால்,
மதுபோதையிலிருந்த காதலன் எரிச்சலடைந்தான்.
இதனால் அப்பெண்ணின் முகத்தில் குத்தி, எட்டி உதைத்துள்ளான்.
அதோடு, மேசை விளக்கு மற்றும் நாற்காலியைக் கொண்டும் தன் முதுகில் அவன் பலமாகத் தாக்கியதாக, ம.சீ.ச புகார் பிரிவில் அப்பெண் புகாரளித்துள்ளார்.
“அந்த விடியற்காலையிலேயே வீட்டை விட்டு வெளியேற முயன்ற போது, சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு வந்து என் கழுத்தில் வைத்து அழுத்தினான்”
பின்னர் எப்படியோ தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று விட்டு போலீஸிடம் புகாரளிக்கச் சென்ற அப்பெண்ணுக்கு, அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காதலி தன்னை அடித்து விட்டதாகக் கூறி, முன்கூட்டியே அவ்வாடவன் போலீசில் புகார் செய்திருந்தான்.
இதையடுத்து இரு பக்கமும் விசாரிக்க வேண்டியிருந்ததாகக் கூறிய போலீஸ், பின்னர் அவ்வாடவனைக் கைதுச் செய்தது.