
கோலாலம்பூர், ஏப் 14 – தாய்லாந்தில் புதன்கிழமையன்று நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆடவர் மலேசியாவில் இரண்டு கடுமையான குற்றச்செயல்களில் தேடப்படும் நபர் என்பதோடு , இதற்கு முன் 10 குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னணியை கொண்டுள்ளார்.
62 வயதான அந்த நபரிடம் கொலைக்காக தேடப்படும் இரு போலீஸ் பதிவுகளும், 1969 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் மற்றொரு வழக்கும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் Razarudin Husain தெரிவித்தார்.
தாய்லாந்திலிருந்து அந்த நபரை இங்கு கொண்டுவருவதற்கு முன்பு அந்த நபர் சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் ஆராயப்படுகின்றன. மேலும் தாய்லாந்தில் அவர் செய்த குற்றங்கள் குறித்த விசாரணை அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.
ஹாட் யாய் நகரில் ஆயுதமேந்திய கொள்ளைக்காக கைது செய்யப்பட்டவுடன் அது குறித்த தகவல் மலேசியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.அந்த நபர் இன்னும் விசாரணைக்காக ஹட்யாய் லாக்காப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த நபரை தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்கு கொண்டு வருவதற்காக இந்த நாட்டில் அவர் செய்த குற்றங்களை நாங்கள் மேலும் விசாரிப்போம் என ரசாருடின் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் மலேசியாவில் வசிக்கவில்லை என்பதும், தாய்லாந்தில் தலைமறைவாக இருப்பதற்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.
தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, அந்த நபரிடம் தாய்லாந்தின் போலியான அடையாள அட்டை இருந்துள்ளதோடு மலேசியாவின் மை கார்டு அல்லது கடப்பிதழ் இல்லாததும் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
ஹாட் யாய் 9 மில்லியன் பாட் அல்லது 1.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை கொள்ளையிட்டபின் தப்பிச் சென்ற அந்த சந்தேகப் பேர்வழி பேங்காக்கில் நொந்தபுரி ( Nonthaburi ) மாவட்டத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டதை தாய்லாந்து போலீசார் உறுதிப்படுத்தினர்.